Saturday, June 16, 2012

அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க!

ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தைதான் ரோல் மாடல், தந்தைதான் ஹீரோ.      பெண் குழந்தை என்றால் கேட்கவே வேண்டாம் எல்லாம் தந்தை செல்லங்களாகவே இருப்பார்கள். தந்தைக்கு பிடித்ததுதான் தனக்கும் பிடிக்கும் என்று கூறும் குழந்தைகள் இருக்கத்தான் செய்கின்றனர். இத்தகைய பாசமிகு தந்தையர்களை பெருமைப்படுத்தவும், தந்தையர்க்கு மரியாதையும், நன்றியும் செலுத்தும் விதமாக தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 17) கொண்டாடப்படுகிறது. 

பாசத்துக்கு எப்போதும் அன்னை தான் உதாரணம். ஆனால் தந்தைதான் ஒரு குழந்தைக்கு வழிகாட்டியாக இருக்கிறார். "அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்' என்ற பாடல் வரிகள் தாய், தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. சிறு வயதிலேயே குழந்தைக்கு தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இதன் நோக்கம். தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு தந்தையும் தனது குழந்தைக்கு ஒரு பொறுப்புள்ள தந்தையாக செயல்படவேண்டும். அதே நேரத்தில் தந்தையின் தியாகங்களை கருத்தில் கொண்டு, வயதான காலத்தில் குழந்தைகள் அவர்களை பேணிக்காக்க வேண்டும். 

சிறுவயதில் நமது ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு செயல்பட்ட தந்தை வயதான பின்னர் அவர்களின் ஆரோக்கியத்தில் நாம் அக்கறை செலுத்த வேண்டும். அதற்காக ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் நிபுணர்கள் இதை பின்பற்றுங்களேன். உங்கள் தந்தை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பார். 

நகரங்களில் வசிக்கும் பெரும்பாலான குடும்பங்களில் பழமையும், நாகரீமமும் கலந்த வாழ்க்கை வாழ்கின்றனர். பெரும்பாலான தந்தையர்களுக்கு நாகரீகமான வாழ்க்கை முறை பிடிக்காமல் போகலாம். இதனால் சிக்கல்கள் எழும். எனவே தந்தையின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். 

தன்னுடைய குழந்தைகள் தன்னுடன் சரியாக பேசாமல் இருக்கின்றனரே என்றுதான் பெரும்பாலான தந்தையர் கவலைப்படுகின்றனர். கிரிக்கெட் முதல் பங்குச்சந்தை வரை தந்தையரிடம் பகிர்ந்து கொள்ளலாம். அதுவே தந்தையின் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

நாம் குழந்தையாக இருக்கும் போது நமக்கு பாக்கெட் மணி கொடுத்திருப்பார்கள். அதுபோல இப்போது வயதான தந்தைக்கு நாம் பாக்கெட் மணி கொடுக்கலாம். அது அவர்களை மகிழ்ச்சிப் படுத்தும். என்னதான் பிஸி என்றாலும் மாதம் ஒருமுறையாவது சினிமா, பார்க் என்று எங்காவது அப்பாவை வெளியே அழைத்துச் செல்லலாம். 

தந்தையின் உடல் நலனில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள் பச்சை காய்கறிகளை வாங்கி சத்து மாறாமல் அவர்களுக்கு சமைத்து உண்ணக்கொடுங்கள். அவ்வப்போது அவரை ஹெல்த் செக் அப் செய்ய அழைத்துச் செல்லுங்கள். 

ஆன்மிகப் பயணம் கூட ஆரோக்கியத்தோடு தொடர்புடையது தான். எனவே அவருக்கு பிடித்தமான இடங்களுக்கு அனுப்பிவையுங்கள். தந்தையர் தினத்திற்கு என்று தனியாக நாளை செலவழிக்க வேண்டாம். என்னதான் தலைபோகிற காரியம் என்றாலும் தினசரி பத்து நிமிடங்கள் வயதான தாய் தந்தையர்களுக்கு செலவழியுங்கள் அதுவே அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

No comments:

Post a Comment